Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சீனாவுக்கு உளவுத் தகவல் அனுப்பிய அமெரிக்க பெண் கைது: சிக்கியது எப்படி?

சீனாவுக்கு உளவுத் தகவல் அனுப்பிய அமெரிக்க பெண் கைது: சிக்கியது எப்படி?
சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்க பெண் கைது

புகாரில் இலக்கின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், தைவான் அதிபரின் மகனே கண்காணிக்கப்பட்டதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சீன அரசுக்காகத் தைவான் அதிபர் லாய் சிங்-தேவின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கண்காணித்து தகவல்கள் அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்கப் பெண்ணை எஃப்பிஐ கைது செய்துள்ளது.

கலிபோர்னியாவின் இர்வைன் நகரைச் சேர்ந்த வான்யிங் ஜாங் (34), ‘ஹெதர்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் முகவராகப் பணியாற்றினார். குடியுரிமை பெற்ற அமெரிக்கரான இவர், சீனாவுக்குப் புறப்படவிருந்தபோது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அரசுக்கு அறிவிக்காமல் சீன அரசின் முகவராகச் செயல்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின்படி, சீன அதிகாரிகளின் அறிவுறுத்தலால் ஜாங் மற்றும் மற்றொருவர் 2025 செப்டம்பர் 1-ம் தேதி சியாட்டிலுக்குச் சென்றனர். இலக்காகக் குறிப்பிடப்பட்ட நபரின் வீட்டுக்கு வெளியே வாகனத்திலிருந்து அவரையும், குடும்பத்தினரையும் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. புகைப்படங்கள், வீடியோக்கள், வாகனப் பதிவு எண்களை சீன அதிகாரிக்கு ஜாங் அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்காணிப்பு காட்சிகள் அருகிலிருந்த பாதுகாப்புக் கேமராவில் பதிவாகியுள்ளதாகப் பிரமாணப் பத்திரம் தெரிவிக்கிறது.

புகாரில் இலக்கின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், தைவான் அதிபரின் மகனே கண்காணிக்கப்பட்டதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது. அதிபரின் மூத்த மகன் டிங்-யு லாய், சியாட்டில் பகுதியில் பொறியாளராக பணியாற்றுகிறார். அதிபரின் உறவினர்கள் கண்காணிக்கப்பட்டதைத் தைவான் அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியது. இதை எல்லைகளைக் கடந்த ஒடுக்குமுறை எனக் கண்டித்த செய்தித் தொடர்பாளர் கரேன் குவோ, ஜனநாயக ஆதரவாளர்களையும் குடும்பத்தினரையும் அச்சுறுத்துவதை உலகம் சகிக்கக்கூடாது என்றார்.

பெய்ஜிங்கின் சர்வதேச உறவுகள் பல்கலைக்கழகத்தில் படித்த ஜாங், பின்னர் சீன அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்ததாகப் பிரமாணப் பத்திரம் கூறுகிறது. இதுதொடர்பாக சீனத் தூதரகம் உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் சீன நலன்களுக்காக ரகசியமாகச் செயல்படுவதாகக் கூறப்படுவோருக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இக்கைது அமைந்துள்ளது.

1949 உள்நாட்டுப் போருக்குப் பின்னர் பிரிந்த தைவானை, தனது பிரதேசமாகச் சீனா உரிமை கோருகிறது. 2024-ல் அதிபரான லாய், தைவானைப் பிரதிநிதித்துவப்படுத்த சீனாவுக்கு உரிமையில்லை எனக் கூறுகிறார். அவரைச் சீனா பிரிவினைவாதியாகக் கருதுகிறது. தைவானின் பாதுகாப்புச் செலவை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தவும் லாய் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே, ஆர்கேடியா முன்னாள் மேயர் எய்லீன் வாங், சீன அரசின் சட்டவிரோத முகவராகச் செயல்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சம்மதித்து கடந்த மே மாதம் பதவி விலகினார். சீன அதிகாரிகளின் உத்தரவுப்படி பெய்ஜிங் ஆதரவுக் கட்டுரைகளைப் பகிர்ந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவில் ஜனநாயக ஆதரவாளர்களைக் கண்காணித்து அச்சுறுத்துவதாகவும் சீனா மீது நீதித் துறை குற்றம் சாட்டுகிறது.



முந்தைய செய்தி
நைஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து: 32 பேர் உயிரிழப்பு
அடுத்த செய்தி
Israel was ready to shoot down Flydubai jet

தொடர்புடைய செய்திகள்